Friday, December 30, 2011

2011 - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள்

 
 
எல்லா படங்களுமே உழைப்பும் அர்ப்பணிப்பும் கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஆனால், வெளியாகும் எல்லா படங்களுமே வெற்றி பெறுவதில்லை.

2011 -ல் திரைப்படம் வெளியாவதற்கு முன் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு, வெளிவந்த பின் மக்களிடையே எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறத் தவறிய படங்கள் சில :

யுத்தம் செய் : வக்கிர தாகத்தைத் தணிக்க இளம் பெண்களை வேட்டையாடும் பெரும்புள்ளிகளுக்கு எதிராக உக்கிர 'யுத்தம் செய்'யும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தினரின் கதை! நீள நீளமான ஷாட்கள், கால்களில் கவனம் குவியும் கேமரா, தரையைப் பார்த்தே பேசும் ஹீரோக்கள், 15 பேராக இருந்தாலும் ரேஷன் அரிசி, பொங்கல் பரிசு போல வரிசையில் ஒவ்வொருவராக வந்து அடிவாங்கும் அடியாட்கள்... என 'மிஷ்கின் கிளிஷே'க்கள் இதிலும் அதிகம். பலவீனமான வியூகம் காரணமாக யுத்தச் சத்தம் மட்டுமே கேட்டது.

நடுநிசி நாய்கள் : சிம்பு - கெளதம் கூட்டணியில் வெளிவந்து தமிழக இளைஞர்கள் கொண்டாடிய 'விண்னைத்தாண்டி வருவாயா' படத்திற்கு பிறகு கெளதம் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இடையே வந்த படம். பின்னணி இசையே இல்லாமல் வெளிவந்தது மட்டும் தான் இந்த படத்தின் ஹைலைட். பெண்களிடம் மிகுந்த எதிர்ப்பை சம்பாதித்ததால் தோல்வியுற்ற படம்.

சீடன் : திருடா திருடி படத்திற்கு பிறகு சுப்பிரமணிய சிவா - தனுஷ் இணைந்த படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு நிலவியது. ஆனால் இக்காலத்தில் தனுஷை சாமியாக வைத்து கதைக்களம் இருந்ததால் மக்களிடம் வரவேற்பை பெறவில்லை.

மாப்பிள்ளை : ரஜினி நடித்த மாப்பிள்ளை படத்தின் ரீமேக் என்ற எதிர்ப்பார்ப்புடன் வந்த படம். தனுஷ் நடிப்பில் சுராஜ் இயக்கிய படம் என்றாலும் மக்களிடம் வரவேற்பு பெறவில்லை. ஒரு பெருங்கூட்டத்தை நாயகன் அசால்ட்டாக அடிப்பது என்பது போன்ற விஷயங்கள் அதிகமாக இருந்ததால், படம் பார்க்கும் கூட்டத்தை கவரவில்லை.

எங்கேயும் காதல் : ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் வெளியானதில் இருந்தே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஜெயம் ரவி நடிக்க பிரபுதேவா இயக்கி இருந்தார். தொய்வான திரைக்கதை அமைப்பு என்பதால் வரவேற்பு இல்லை.

வேங்கை : 'சிங்கம்' பெற்ற வரவேற்பை அடுத்து ஹரி இயக்கத்தில் தனுஷ் நடித்த படம். படத்தின் அடுத்த அடுத்த காட்சி என்ன, வசனம் என்ன, பாடல் எப்போது வரும் என படம் பார்த்தவர்கள் யூகிக்க கூடிய அளவுக்கு காட்சிகள் இருந்ததால்.. இந்த முறை ஹரி.. ரொம்ப் ஸாரி !

ரெளத்திரம் : 'கோ' என்ற வரவேற்பு பெற்ற படத்தினை அடுத்து ஜீவா நடிப்பில் வெளியான படம். வில்லன் பில்டப் ஓவராக வைத்து இறுதியில் வில்லன் யார் என்பதை காட்டும் போது மக்களிடையே சிரிப்பை வரவழைத்த படம். திரைக்கதையில் கவனமின்மையால் மக்களிடையே கவனிக்கப்படாமல் போனது.

வந்தான் வென்றான் : ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை ஆகிய படங்களை தொடர்ந்து கண்ணன் இயக்கத்தில் ஜீவா நடித்த படம். படம் பார்த்தவர்களைக் கவரும் அம்சங்கள் குறைவாக இருந்ததால், வசூலும் குறைவாகவே இருந்தது.

வெடி : தெலுங்கில் ஹிட் அடித்த 'சௌர்யம்' படத்தை சௌகர்யமாகக் தமிழில் கடத்திய படம். விஷாலின் கேரக்டரில் எந்தப் புதுமையும் இல்லை. 'அவன் இவன்' விஷாலைப் பார்த்துவிட்டு ஆசையாக வெடி பார்க்கப் போன மக்களுக்கு ஏமாற்றம்.

வித்தகன் : டான் அவதாரம் எடுத்து சமூக விரோதிகளை வேட்டையாடும் போலீஸ் 'வித்தகன்'!. போதைப் பொருள் கடத்தல்காரர்களை அரசாங்கம் விடுவிப்பது எப்படி மிலிந்த் சோமனுக்குத் தெரியாமல்போகிறது? அவர்கள் எப்படி பார்த்திபனின் கஸ்டடிக்கு வருகிறார்கள்? அந்தக் கடத்தல்காரர்களின் பாஸ் யார்? என்று எக்கச்சக்க கேள்விகளால்... விளையாட்டுத் துப்பாக்கி ஆகிவிட்டது வித்தகனின் கன்!

ஒஸ்தி :'நான் கண்ணாடி மாதிரிலே' என நல்லவனுக்கு நல்லவனும் கெட்டவனுக்குக் கெட்டவனுமான அதிரடி அடிதடி 'ஒஸ்தி' போலீஸ் கதை! இந்த வருட கோட்டாவுக்குத் தமிழ் சினிமாவின் 'போலீஸ் ஸ்டோரி'!. படத்தில் எல்லாரும் பக்கம் பக்கமாகப் பேசித் தீர்க்கிறார்கள். வெளியே வந்த பிறகுதான் தெரிகிறது... உலகம் இவ்வளவு அமைதியானதா என்று?

ராஜபாட்டை :சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த கமர்ஷியல் படம். சரியான கூட்டணி.. ஆனால் தேர்ந்தெடுத்த கமர்ஷியல் கதை தான் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. விக்ரமிற்கும் சரி, சுசீந்திரனுக்கும் சரி இது நிஜமான 'ராஜபாட்டை' இல்லை.

Popular Posts

Popular Posts