ஆண்டு தோறும் தமிழ் திரையுலகினருக்கு விருது வழங்கி வரும் எடிசன் விருது வழங்கும் விழாவில் இந்த ஆண்டு விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினி விருது வழங்கியிருக்கிறார்கள்.பொதுமக்களின் வாக்குகள் மூலம் ஆண்டு தோறும் தமிழ் திரையுலகின் சிறந்த நடிகர், நடிகைகள், படம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தெடுத்து 'எடிசன் விருதுகள்' என்ற பெயரில் மைதமிழ்மூவி.காம் இணையதள பத்திரிகை ஆசிரியர் செல்வகுமார் விருது வழங்கி வருகிறார். 5வது வருடமான விருது வழங்கும் விழா இந்த ஆண்டு எடிசன் விருது வழங்கும் விழா, சென்னை, லேடி ஆண்டாள் பள்ளி அரங்கத்தில் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதியன்று நடைபெற்றது.
இந்த விருது வழங்கும் விழாவில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், நடிகர்கள் ஜெயம் ரவி, ராகவா லாரன்ஸ், ஆர்.கே, தெய்வத்திருமகள் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் பேபி சாரா, நடிகைகள் ரிச்சா கங்கோபாத்யா, லட்சுமி ராய், இனியா, கோவை சரளா, லட்சுமி ராமகிருஷ்ணா, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள்.
இதில் நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகர் விருதும், சூப்பர் ஸ்டார் ரஜினி விருதும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த நடிகைக்கான விருது ரிச்சா கங்கோபாத்யாவுக்கும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஹாரிஸ் ஜெயராஜுக்கும் வழங்கப்பட்டது. ஜெயம் ரவிக்கு சிறந்த ரொமான்டிக் ஹீரோவுக்கான விருது வழங்கப்பட்டது. சிறந்த வில்லன் விருது ஆர்.கே வுக்கு வழங்கப்பட்டது. கனவு கன்னி விருது லஷ்மி ராய்க்கும், சிறந்த நடிப்புக்கான விருது ராகவா லாரன்ஸுக்கு வழங்கப்பட்டது.
மெளனகுரு படத்திற்காக சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை சாந்தகுமார் பெற்றார். சிறந்த விழிப்புணர்வு படத்திற்கான விருதை 'வாகை சூட வா' படத்திற்காக சற்குணம் பெற்றார். மேலும் சிறந்த மேக்கப் மேன், டப்பிங் இன்சார்ஜ் உள்ளிட்ட சினிமாவில் உள்ள பல துறைகளில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்பட்டது.
சூப்பர் ஸ்டார் விருதை பெற்ற விஜய் நிகழ்ச்சியில் பேசியதோடு, நண்பன் படத்தில் இடம்பெற்ற "என் பிரண்ட போல யாரு மச்சான்" என்ற பாடலை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.