திருச்செந்தூர்: உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள் என இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், பிரபல இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியயாவது, தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதால் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அணியில் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றிருந்தது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தனியாக போட்டியிடுகின்றது.
எனவே, விஜய் மக்கள் இயக்க தொண்டர்கள் தமிழக உள்ளாட்சி தேர்தலில் சுமார் 1,200 இடங்களுக்கு போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளனர். ஆனால் விஜய் மக்கள் இயக்கம் இந்த தேர்தலில் அ.தி.மு.க. அணிக்கு ஆதரவாக செயல்பட முடிவு செய்துள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உடனடியாக நீக்கப்படுபவர்கள். திருநெல்வேலி மேயர் பதவிக்கு மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் மாரியப்பன் பி.ஜே.பி. ஆதரவுடன் போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிலிருந்து இயக்கத்தினர் அனைவரும் விலக வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். இயக்கத்தின் கட்டுபாட்டை மீறி யாராவது போட்டியிட்டால் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், போட்டி வேட்பாளர்கள், இயக்கத்தின் பெயரையோ, படத்தையோ, கொடியையோ விஜய் பெயரையோ பயன்படுத்த கூடாது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது நல்லதல்ல. அப்படி செய்தால் அந்த இயக்கத்தால் வளர முடியாது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தனியாக போட்டியிடுவதால் அதற்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்து உள்ளோம், என்றார்.
No comments:
Post a Comment