ஊடகம் சம்பந்தப்பட்ட படம் என்பதால், டைட்டில் கார்டில் ஜெயா டிவிக்கு நன்றி என்பதில் தொடங்கி, ஜெயா டிவி, ஜெயா நியூஸ் என்று படம் முழுக்க ஜெயா மயம்தான்.
என் கட்சி ஒரேகட்சி.....என்று சின்ன இடைவெளி விட்டு 'தங்கச்சி' என்று அரசியல் வெடிக்கிறார் விஜய். இன்னும் நிறைய வெடிக்கின்றன.
இந்த மண்ணை ஆண்டாரு..மக்களை ஆண்டாரு...அடுத்து மாநிலத்தையே..... என்று கிரேன் மனோகர் சொல்லிக்கொண்டிருக்கும் போது, அதற்கு மேல் சொல்ல வேண்டாம் என்று விஜய் சைகை செய்ய, நீங்க வேண்டாம்னு சொல்லுறதால சொல்லல என்று நிறுத்திக்கொள்கிறார்.
''சிரிப்பை நாமளே வெளிப்படுத்துறோம், அழுகையை நாமளே வெளிப்படுத்துறோம், ஆனா... கோபத்தை வெளிப்படுத்த மட்டும் பொதுவா ஒருத்தன் வரணும் என்று எதிர்ப்பார்கிறோம். ஒவ்வொருத்தரும் கோபத்தை வெளிப்படுத்தணும். தேர்தலின் போது கோபத்தை வெளிப்படுத்துங்க. ஆட்சி மாற்றம் வரும்'' என்று க்ளைமாக்ஸில் சரவெடி கொளுத்துகிறார் விஜய்.
இது போதாது என்று க்ளைமாக்ஸ் காட்சியில் பல்லாயிரக்கணக்கான விஜய் மக்கள் இயக்க கொடிகள்.
''உழைச்சு சாப்பிடுறவனோட வியர்வை,தாய்ப்பாலைவிட சிறந்தது'', ''உங்க நாட்டுல வாழுற முஸ்லீம்களை விட ,எங்கள் நாட்டுல வாழுற முஸ்லீம்கள் பாதுகாப்பா இருக்காங்க'', ''சும்மாவே காட்டு காட்டுனு காட்டுவோம்,இதுல நீ காட்டு காட்டுனு வேற சொல்ற..'' என்று படத்தில் நிறைய பஞ்ச் அடிக்கிறார் விஜய்.
படத்தின் துவக்க காட்சிதான், நாம விஜய் படத்துக்கு வந்தோமா? விஜயகாந்த் படத்துக்கு வந்தோமா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அட, ஆமாங்க, ஹெலிகாப்டர் வானில் பறக்கிறது. பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் எல்லை என்று ஏதோ ஒரு பாலைவனத்தை காட்டுகிறார்கள். அங்கு விமானம் தரை இறங்குகிறது. விமானத்தில் இருந்து தீவிரவாதிகளும் உள்துறை அமைச்சர் உலகநாதனும் இறங்குகிறார்கள்.
பக்கா கிரிமினல் அமைச்சரிடம், ''எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம். சென்னை முழுவதும் குண்டு வெடிக்க வேண்டும்'' என்று பேரம் பேசுகிறார்கள்.
''என் பேங்க் அக்கவுண்டுல 5 ஆயிரம் கோடி ஏறுதுன்னா, சென்னையை சுடுகாடா ஆக்குறேன்'' என சவால் விடுகிறார் உலகநாதன். இந்த சவாலை எல்லாம் முறியடிக்கிறார் வேலாயுதம்.
கிராமத்தில் வசித்து வரும் பால்கார இளைஞன் வேலாயுதத்திற்கு எல்லாமே தங்கை சரண்யா தான். தங்கை சரண்யா மேல் வேலாயுதம் உயிரையே வைத்திருக்கிறார். ''நீ அம்மா முகத்தை பார்த்ததே இல்லையில்ல... இப்ப பாரு..'' என்று தங்கையை கண்ணத்தோடு அணைத்துக்கொண்டு கண்ணாடியை காட்டுகிறார்.
இப்படி தங்கச்சி செண்டிமெண்ட் வேலாயுதமாக இருக்கும் விஜய், எப்படி தமிழகமே கடவுளாக போற்றும் வேலாயுதமாக மாறுகிறார்? என்பதுதான் கதை.
ஒரு நிருபரின் கற்பனைப்பாத்திரம் நிஜ உருவமெடுத்து அதர்மத்தை அழிப்பது வேலாயுதம். இது பத்து வருடங்களுக்கு முன்பு நாகார்ஜூன், ஷில்பா ஷெட்டி, சவுந்தர்யா, ரகுவரன், பிரகாஷ் ராஜ் நடிக்க, மறைந்த இயக்குநர் திருப்பதிசாமியின் இயக்கத்தில் வெளிவந்த ''ஆசாத்'' தெலுங்கு படத்தின் முழு நீள தழுவல்.
மூலக்கதை திருப்பதிசாமி என்று மட்டும் டைட்டில்கார்டில் போடுகிறார் டைரக்டர் ராஜா.
சந்தானம், எம்.எஸ். பாஸ்கர், சூரி, பாண்டி, வையாபுரி, மனோகர், கிரேன் மனோகர், போண்டா மணி, இளவரசு ஆகியோருடன் விஜய் வைத்திருக்கும் காமெடி கூட்டணி - வெற்றிக்கூட்டணி. இந்த காமெடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று கேட்கும் விதத்தில் படத்தில் 70 சதவிகிதம் காமெடிதாங்க. நிச்சயம் சிரித்து சிரித்து வயிறு வலிக்கும். இல்லையென்றால் இறுமல் வரும். அந்த அளவிற்கு காமெடியில் வெளுத்து வாங்குகிறார்கள்.
விஜய்யை வாழைப்பழத்தோலில் வலுக்கி விழ வைத்து, அவர் எழ முடியாமல் போனதும் அவரின் சிட்பண்ட் பணத்தை தான் எடுத்துக்கொண்டு ஓடிவிடலாம் என்று திட்டம் தீட்டுகிறார் சந்தானம். அதற்காக வாழைபழத்தை கையில் வைத்துக்கொண்டு, '' உன்னை எல்லோரும் ஆயி போறதுக்கு யூஸ் பண்ணுவாங்க. நான் பணகாரனாயி போறதுக்காக யூஸ் பண்ணுறேன்'' என்று சொல்லும்போது, தியேட்டரில் சிரிப்பலை.
கோவிலில் விஜய் வலுக்கி விழுவதற்காக சந்தானம் போட்ட வாழைப்பழத்தோலில் ஜெனிலியா வலிக்கி விழுகிறார். குங்கும கையுடன் தாங்கிப்பிடிக்கிறார் விஜய். அப்போது அவரின் கையில் உள்ள குங்குமம் ஜெனிலியாவின் பின் பக்கத்தில் ஒட்டியிருப்பதை கவனித்து விடுகிறார். வெள்ளை உடை என்பதால் கை அச்சு அப்படியே படிந்திருக்கிறது.
யாராவது தவறாக நினைத்துவிடுவார்களே என்று நினைத்து, உடனே ஓடிச்சென்று தட்டிவிடுகிறார் விஜய். எதற்காக தட்டுகிறார் என்பது தெரியாததால், நெருப்பாய் எரிந்துவிட்டு சென்றுவிடுகிறார் ஜெனிலியா.
ஜவுளிக்கடையில் மாமன் மகள் ஹன்சிகா, ஒரு ட்ரையல் (TRAIL) ரூமில் இருந்துகொண்டு, ''எனக்கு இந்த சுடிதார் நல்லா இருக்கா பாரு மாமா'' என்று குரல் கொடுக்க, வேகமாக வந்து விஜய் வேறு ஒரு ட்ரையல் ரூம் கதவை திறந்ததும், மேலாடை உடுத்திக்கொண்டிருக்கும் ஜெனிலியாவைப்பார்த்துவிட்டு, பார்த்துட்டேன்.. பார்த்துட்டேன்... என்று புலம்பியபடி சந்தானத்திடம் வருகிறார்.
ஆடையை சரிசெய்துவிட்டு, பின்னாலேயே ஜெனிலியா வேக வேகமாக வருகிறார். '' அன்னைக்கி கோவில்ல பின்னாடி தட்டி விட்ட பொண்ணுதான அது. இப்ப ஏன் இப்டி டென்ஷனோட வருது'' என்று சந்தானம் கேட்க, முன்னாடி பார்த்துட்டேன்'' என்று சொல்லுகிறார் விஜய்.
''அப்ப இனி, முன்ன பின்ன தெரியாத பொண்ணுன்னு சொல்ல முடியாது'' என்று சந்தானம் கலாய்க்க, நெருங்கி வந்த ஜெனிலியா விஜய்யிடம் நெருப்பாய் வார்த்தைகளை கக்குகிறார்.
''இப்ப என்ன.. நான் உன்னோட நெஞ்ச பார்த்துட்டேன்னுதான இப்படி கோபப்படுற, வேணும்னா நீ என் நெஞ்ச பார்த்துக்க சரியாப்போயிடும்'' என்று சொல்லிக்கொண்டே பனியனை விளக்கி விஜய் நெஞ்சை காட்ட, டென்ஷாகி ஜெனிலியா எஸ்கேப்.
''இந்த மாதிரி எந்த ஹீரோவும் பழிக்கு பழி வாங்கியது கிடையாது'' என்று சந்தானம் சொல்ல, தியேட்டரில் செம விசில்.
பாசமலர் படம் பார்க்க தங்கையுடன் செல்கிறார் விஜய். சாவித்திரியை ஜெமினியிடம் ஒப்படைக்கும் காட்சியில், என் கண்ணையே ஒப்படைக்கிறேன். அதுல என்னைக்கும் நான் ஆனந்த கண்ணீரத்தான் பார்க்கனும்'' என்று சிவாஜி சொல்ல, ''அண்ணே இந்த காட்சி எனக்கு ரொம்ப பிடிக்குது'' என்று சரண்யா சொல்கிறார்.
உடனே, விஜய் அந்த காட்சியை திரும்ப போடச்சொல்லுகிறார். ஏகப்பட்ட அலம்பல்களுக்கு பிறகு ஆபரேட்டர், திரும்ப அந்த காட்சியை போடுகிறார். ஆனால், ஒன்ஸ்மோர் ஒன்ஸ்மோர் என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார் விஜய். என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்.... என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்.... என்ற காட்சி திரும்ப திரும்ப வந்துகொண்டேயிருக்க, '' இந்த ரீலையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன். வீட்டுல போயி ஓட்டிப்பார்த்துக்க, என்று விஜய்யிடம் ஆத்திரமாக ஆபரேடட்டர் பிலிம் ரீலை நீட்டும்போது தியேட்டரில் செம க்ளாப்ஸ்.
மஞ்சணத்தி நாட்டுக்கட்டை பாடலில், செம கட்டை என்று சொல்ல வைக்கிறார் ஹன்சிகா. படத்தில் பொதுவாகவே இவருக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய மனசுங்க. வரும் காட்சிகளில் எல்லாம் பரந்து விரிந்து இடுப்பையும், தொப்புளையும் காட்டிப்போகிறார்.
''சொன்னா புரியாது...சொல்லுக்குள்ள அடங்காது.. நீங்களெல்லாம் என் மேல வச்ச பாசம்...'' என்ற பாடலை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியே அடித்தொண்டையில் பாடி வெறுப்பேத்துகிறார். சங்கர்மகாதேவனை பாடவச்சிருக்க கூடாதா சாரே.
அந்த கெமிக்கல் ஆலையின் உலை வெடித்தால் சுற்றியுள்ள கிராமங்கள் அத்தனையும் அழிந்துவிடும் என்று பயணிகள் ரயிலை தடம் மாற்றி மோத முயற்சிக்கிறது தீவிரவாத கும்பல். விஜய் அதை முறியடிக்கும் காட்சிதான் செம காமெடியாக இருக்கிறது.
ரயில் தண்டவாளம் ஆலையின் உள்ளே செல்லும் படி அமைத்திருப்பது எங்கும் உள்ளதுதான். ஆனால், அவ்வளவு ஆபத்தான உலையின் அருகே செல்லும்படியா தண்டவாளம் அமைதிருப்பார்கள்? அத்தனை வேகத்தில் வரும் ரயிலை உலையின் சில இன்ச் அருகே வந்து மோதாமல் நிறுத்தும்போது, ரயிலோடு சேர்த்து ரீலும் ஓட்டுறாருப்பா என்று திரையரங்கு முழுவதும் கமெண்ட்.
இத்துடன் படம் முடிந்துவிட்டது என்று எல்லொரும் இருக்கையை விட்டு எழுந்தால், அதன்பிறகும் படம் ஓடுகிறது. அதுவும் அரைமணி நேரத்திற்கு ஓடுகிறது.
தங்கச்சிதான் உலகம் என்று இருக்கும் விஜய், அந்த தங்கை பாம் வெடித்து இறந்ததும், முதுகு காட்டி குலுங்கி குலுங்கியோ, கைகளால் முகத்தை மூடிக்கொண்டோ காட்சியை ஒப்பேற்றாமல் க்ளோசப்பில் உணர்ச்சிபூர்வமாக அழுது அசத்துகிறார்.
சூர்யா, அமீர்கான், ஷாருக்கான் எல்லாம் சிக்ஸ் பேக், 8 பேக்ஸ் என்று காட்டுகிறார்களே, நாமளும் காட்டுவோம் என்று க்ளைமாக்ஸில் பெருத்த உடம்பை காட்டுகிறார். அதை க்ளோசப்பில் பல கோணங்களில் காட்டுகிறார்கள். 'விஜய்க்கு ஏன் இப்படி ஒரு விபரீத ஆசை' என்று திரையரங்கின் பல திசைகளில் இருந்தும் கமெண்ட் பறக்கிறது.
படம் முடிந்து எழும்போது, இந்த படத்திற்கு ஒரு வருட உழைப்பு ஏன் என்கிற கேள்வி எழுகிறது.
No comments:
Post a Comment