நடிகர் விஜய் நடித்துள்ள நண்பன் திரைப்படத்தின் பாடல்கள் கோவையில் வெளியிடப்பட்டன. நண்பன் ஆடியோ சி.டி.யை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட அதை நடிகர் பிரபு பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பேசியதாவது:-
இயக்குனர் ஷங்கரின் முதல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தாலும் என்னால் அதை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. தற்போது அவரது இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜின் பாடல்கள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. நடிகர் சத்யராஜ் புதுமையான வேடத்தில் இப்படத்தில் தோன்றுகிறார். தான் ஒரு இயக்குனர் என்ற போதும் எவ்வித மறுப்பும் இல்லாமல் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.
நகைச்சுவை நடிகர் சத்யன் ஒவ்வொரு காலகட்டத்தில் நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறார். படத்தில் என்னுடன் நடித்துள்ள ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோர் எனது நண்பர்கள்.
ஷுட்டிங் ஸ்பாட்டில் ஜீவா கலகலப்பூட்டுவார். சோகமான காட்சிகளை சீரியசாக நடித்துக் கொண்டிருப்போம். அப்போதும் அவர் கலகலப்பூட்டுவார். என்னால் எந்த நேரத்திலும் சிரிப்பை அடக்க முடியாது. ஜீவாவின் கலாட்டாவை சிரித்து ரசித்தேன்.
இவ்வாறு விஜய் கூறினார்.
இயக்குனர் ஷங்கர் பேசியதாவது:-
எந்திரன் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தோம். அங்கு தேசிய நெடுஞ்சாலையில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தோம். ஆனால் அன்றைய தினம் அனுமதி கிடைக்கவில்லை. படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, "த்ரி இடியட்ஸ்" திரைப்படத்தைப் பார்க்கச் சென்றேன்.
திரையரங்கை விட்டு வெளியே வரும்போது இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. நண்பன் திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. ரஜினிகாந்துக்கு பிறகு கடமையுணர்வு மிக்க நடிகராக விஜய் இருக்கிறார்.
நடிகர் விஜயை அனைவருக்கும் பிடிக்கும். யாருக்கெல்லாம் பிடிக்காதோ அவர்களுக்கும் நண்பன் திரைப்படத்தை பார்த்தால் அவரை பிடிக்கும்.
சிவாஜி, எந்திரன் படங்களில் நடிக்க அழைத்தபோது சத்யராஜ் மறுத்தார். நண்பனில் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளார். நிச்சயம் அவர் எனக்காக இந்த படத்தில் நடிக்கவில்லை. அவர் ஒரு சீனியர் நடிகர் என்பதை நிரூபித்துவிட்டார்.
சிவாஜி, எந்திரன் படங்களை போல நினைத்துக் கொண்டு நண்பன் படத்தை பார்க்க வரவேண்டாம். எந்திரன் படம் போல அனிமேட்ரானிக்ஸ், கிராபிக்ஸ் காட்சிகள் கிடையாது. ஆனால் நண்பனில் நல்ல கதை உள்ளது. எனவே எந்திரனை மறந்துவிட்டு எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பன் படத்தை பார்க்க வாருங்கள்.
இவ்வாறு ஷங்கர் கூறினார்.
இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் பேசியதாவது:-
எனது மாணவர் உலகம் போற்றக்கூடிய இயக்குனராக வளர்ந்திருப்பது மிகவும் பெருமைப்படக்கூடியதாக இருக்கிறது. ஒவ்வொரு படமும் வெளியாகும்போது அடுத்த படம் எப்படி இருக்கும் என்ற பயம் இயக்குனர் ஷங்கரிடம் இருக்கும். அதுவே அவரது வெற்றியின் அடிப்படையாக உள்ளது.
நண்பன் திரைப்படத்தை ஷங்கர் தயாரிக்க விரும்பினார். ஆனால் அதற்கான உரிமையை ஜெர்மினி சர்க்யூட் நிறுவனம் முன் கூட்டியே பெற்றுவிட்டது. இருப்பினும் அவர் விரும்பியபடியே இப்படத்துக்கு இயக்குனராகிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர்கள் சத்யராஜ், ஸ்ரீகாந்த், ஜீவா, நடிகை அனுயா, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், பாடலாசிரியர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
No comments:
Post a Comment