Friday, November 11, 2011

விஜயின் நண்பன் படத்துக்கு சிக்கல்

 
 
 
தமிழ் டப்பிங் படங்களை வெளியிட ஆந்திராவில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த கட்டுப்பாடால் ஷங்கர் இயக்கியுள்ள 'நண்பன்' படத்தை தெலுங்கில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னணி ஹீரோ நடித்த அல்லது பிரபல இயக்குனர்கள் இயக்கிய தமிழ் டப்பிங் படங்கள், நேரடி தெலுங்கு படங்களை விட ஆந்திராவில் வசூலில் சாதனை படைத்து வருகின்றன. இதனால் தெலுங்கு பட வியாபாரம் பாதிப்படைவதாக ஆந்திர மாநில விநியோகஸ்தர்கள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். வரும் பொங்கலன்று (தெலுங்கில் சங்கராந்தி) ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்துள்ள 'நண்பன்' படம், '3 ராஸ்கல்ஸ்' என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. பொதுவாக ஷங்கர் இயக்கும் படங்கள் ஆந்திராவில் வசூலில் சக்கைப்போடு போடுவது வழக்கம். அதனால் அன்று வெளியாகும் நேரடி தெலுங்கு படங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆந்திர விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆந்திர மாநில பிலிம் சேம்பர் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. இக்குழுவில், சுரேஷ் பாபு, தில் ராஜு, நாட்டிகுமார், உள்ளிட்ட தயாரிப்பாளர்களும் பூபால், ராம சுப்பா ரெட்டி, விஜயேந்தர் ரெட்டி உட்பட விநியோகஸ்தர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு, டப்பிங் படங்களுக்கான வரியை தற்போது இருக்கும் 20லிருந்து 50 சதவிகிதமாக உயர்த்துவது, சங்கராந்தி, விநாயக சதுர்த்தி, தசாரா உட்பட முக்கியமான விழாக் காலங்களில் நேரடி தெலுங்கு படங்களைத் தவிர மற்ற படங்களை வெளியிடாமல் இருப்பது, டப்பிங் படங்களுக்கான தியேட்டர்களை குறைப்பது, இவற்றை ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கும். இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் அரசாணை வெளியிட, ஆந்திர அரசுக்கு பரிந்துரைக்கப்படும். ''டப்பிங் படங்களுக்கு நாங்கள் எதிரியல்ல. ஆனால், தமிழ் நாட்டில் டப்பிங் படங்களுக்கு அதிக வரி விதிப்பு இருப்பதை போல இங்கும் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்'' என்று தயாரிப்பாளர் சுரேஷ் பாபு கூறினார். இந்த விஷயங்களை ஆந்திர அரசு ஏற்றுக்கொண்டால், பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் 'நண்பன்' படத்துக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Posts

Popular Posts